Sunday, January 04, 2009

அம்மாவும் இங்கிலீஷ் நோட்டும்

அம்மாவுக்கு வயசு 65 ஆச்சு. சின்ன வயசுல இருந்தே பாட்டு பாடறதுன்னா உசுரு. நானும் ஆணுவும் சின்னப் பசங்களா இருக்கும் போது எங்களுக்கு நிறைய பாட்டு பாடுவா. குரல் பிரமிக்கற மாதிரி இருக்கும். சரியான கவனிப்பு இருந்து இருந்தா பெரிய பாடகியா ஆகியிருப்பாங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை. எங்களுக்கும் நிறையா பாட்டு சொல்லித் தந்து இருக்கா. அம்மா சொல்லிக் குடுத்த “பாருக்குள்ளே நல்ல நாடு” பாரதியார் பாட்ட வெச்சு ஏகப்பட்ட பாட்டுப் போட்டில முதல் பரிசு அள்ளி இருக்கேன்.

போன வாரம் திடீர்னு இங்கிலீஷ் நோட் மேல ஆசை வந்துட்டது. அதுவும் நித்யஸ்ரீ பாடினது ரொம்ப புடிச்சுட்டுது. தானும் பாடிப் பாத்துடணும்னுட்டு பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா! அது போறாதுன்னு ஆணு குட்டி பெரிய வித்வான்கள் விதவிதமா வாசிச்சது, பாடினதெல்லாம் mp3 ப்ளேயர்ல போட்டு குடுத்துட்டான். அத்தோட நித்யஸ்ரீ பாடின ஸ்வரங்களயும் அச்சு (print) எடுத்துண்டுட்டா.

ஒரு வாரமா அதையே கேட்டுண்டு, அந்த பேப்பர வெச்சுண்டு, டயம் இருக்கும் போது எல்லாம் ஆத்துல இருக்கறவாள எல்லாம் டார்ச்சர் பண்ணிண்டு இருக்கா. வயசாயிட்டதுனால குரல் முன்ன அளவுக்கு இனிமை இல்லை தான்.

இன்னிக்கு காலைல நான் சாப்பிட உக்காந்து இருக்கேன். எனக்கு சாப்பாடு போட்டுட்டு, இங்கிலீஷ் நோட்ட சாதகம் பண்ண ஆரம்பிச்சுட்டா. நேத்திக்கு பாடினதுக்கு இன்னிக்கு எவ்வளவோ பரவாயில்லை. ஆனா இன்னும் தப்பு தப்பா தான் பாடிண்டு இருக்கா.

இந்த வயசுலயும் கத்துக்கணும்கற ஆர்வம், முடியாதுன்னு தனக்கே சாக்கு போக்கு சொல்லிக்காத தளராத முயற்சி, இரண்டும் சுருக்குனு உரைச்சுது. மஹாவிஷ்ணுவோட விஸ்வரூபம் மாதிரி, அதுக்கு முன்னாடி நான் ஒரு தூசு மாதிரி உணர்ந்தேன்.

-சூலை 4, 2007ல் எழுதியது-